அறிவியலும் பொதுஜனமும்

இன்றைய உலகில், இந்தியாவில் பிரச்சனைக்கு குறைவில்லை. தடுப்பூசி தொடங்கி மரபணு மாற்று பயிர்கள், பருவனிலை மாற்றம் தொட்டு கடவுள் வரை வாக்குவாதமும், குடுமிபிடி சண்டையும் குறைவில்லாமல் நடக்கிறது. சாமான்ய மனிதர் புரிதலின் வேகத்தை விட, விஞ்ஞானம் வேகமாக வளர்ந்து வருகிறது. எந்த தகவல் வேண்டுமானாலும் இணையத்தில் ஓரளவுக்கு சுலபமாக கிடக்கிறது. யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்னும் நிலையில், ஒருவரின் எழுத்தில் இருக்கும் நோக்கமோ, அவர்களின் பார்வை எப்படி அவர் எழுத்தை திரிக்கிறது என்பதோ மிக எளிதாக நம் கவனத்தை தப்பித்துவிடும். அதுவும் நம் நம்பிக்கைக்கோ, கருத்துக்கோ ஒட்டி எழுதி இருந்தால் அதன் உண்மைத்தன்மையை ஆராய நாம் அவ்வளவாக முயலமாட்டோம். இது மனித மூளையின் இயல்பு. அதிலும் நம் நம்பிக்கைக்கோ, புரிதலுக்கோ சற்று எதிராக அல்லது மாறுபட்டு இருந்தால் அதை இன்னும் சுலபமாக மறுத்து விடுவோம். இது தான் நம் இயல்பு.

சாதாரணமாக இது அவ்வளவு பிரச்சனை தரும் விஷயம் இல்லை. ஒரு விதத்தில் இது நம் தினசரி வாழ்கை சுலபமாக செல்ல தேவையான ஒன்று. காலையில் எழுந்ததில் இருந்து எத்தனை முடிவுகளை நாம் நம் வாழ்வில் எடுக்கிறோம். பல சமயம் அவை பிரச்சனை இல்லாதவை. ராசியான சட்டை, நம்மை யாரோ குறுகுறுவென பார்பது போல தோன்றுவது போன்ற பல விஷயங்கள் நம் உறுதிபடுத்த வேண்டிய நிலைபாட்டின்(confirmation bias) விளைவு தான். மூட நம்பிக்கை வளர்வதற்கும் இதுவே காரணம். நூறு பேருக்கு பல்லி விழும் பலன் பொய்யானால் பலர் கண்டுகொள்ள மாட்டார்கள். இதுவே நபர் நூற்றி ஒன்றுக்கு சொன்னதற்கு ஒட்டி எதாவது நடந்து விட்டால், உடனே அது பல்லி விழும் பலனின் உண்மைக்கு எடுத்துக்காட்டு. சீரற்ற வாய்ப்பு (Random Chance), நிகழ்தகவு (Probability) எல்லாம் தோன்றாமல் காற்றில் பறந்துவிடும். மிக சிக்கலான இது போன்ற நம்பிக்கைகளும் பல சமயங்களில் எந்த பிரச்சனையும் தருவதில்லை.

இதுவே மிதமிஞ்சி போனால் மிக மிக ஆபத்து. நோய் வந்தால் மருத்துவரிடம் செல்லாமல், கடவுளிடம் செல்வது; மழை பெய்யவில்லை என்றால் நாய்க்கும், நாய்க்கும் திருமணம் நடத்துவது; இனவாதம்; காலனித்துவம், சாதி அடக்குமுறை போன்ற பல பிரச்சனைகள் இந்த உறுதிபடுத்தும் கோடலின் (confirmation bias) விளைவு தான்.

சரி இப்போ இதை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது? அதுவும் அறிவியல் பேசும் இந்த தளத்தில்? இதை இன்று நாம் சந்திக்கும் ஒரு சமூக பிரச்சனை மூலமாக அலசுவோம். இன்று இந்தியாவின் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்று விவசாயிகளின் தற்கொலை. பிடி பருத்தி அறிமுகபடுத்தியதில் இருந்து விவசாயிகளின் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது என்பது பரவலான தகவல். மரபணு மாற்று விதைகளை(GMO seeds) பயிருடவதன் மூலம் மண் மலடாகிறது, நமக்கு புற்றுநோய் உட்பட பல கேடுகள் உருவாகின்றன, விதை நிறுவனங்களிடம் விதைகள் வாங்க நிர்பந்திக்கப்படும் விவசாயிகள், சுமை தாள முடியாமல் தற்கொலைக்கு தள்ளபடுகின்றனர். இந்தியாவிலும்,  குறிப்பாக விதர்பாவிலும் விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் பிடி பருத்தி தான்; எனவே இவ்வளவு கெடுதல் கொண்ட மரபணு மாற்று விதைகள், விவசாயம் கூடாது என்று சமூக ஆர்வலர் பலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனை அடிபடையாக கொண்டு பிடி கத்தரிக்காய் தடை முதல் அப்துல் கலாம் மொசாண்டோ (Mosanto) கைக்கூலி என்ற குற்றச்சாட்டு என பல்வேறு விளைவுகள் வந்துள்ளன. இதனால் மரபணு மாற்று விதைகளை எதிர்ப்பவர் பலர். சரி, இந்த கூற்றுகளில் எவ்வளவு உண்மை என பார்ப்போமா? இதை முழுமையாக அலச பல கட்டுரைகள் தேவைப்படும் என்பதால், இதில் ஒரு பகுதியை மட்டும், சுருக்கமாக இங்கு அலசுவோம்.

பிடி பயிர்கள் உண்பதால் உடல் நலத்துக்கு கேடு விளையும் என்னும் விசயத்தை எடுத்துகொள்வோம். இதற்க்கு மிக மிக அடிப்படையாக கூறப்படும் ஆய்வுகள் இரண்டு. ஒன்று, 1998-இல் அரபாத் புஸ்தை (Arpad Pusztai) என்னும் புரத விஞ்ஞானி, ஸ்காட்லாந்தின் ரோவேத்ட் இன்ஸ்டிட்யூடில் (Rowett Institute) நடத்திய எலிகளின் மீது மரபணு மாற்றப்பட்ட உருளையின் (GMO Potato)விளைவுகளை ஆராயும் ஆராய்ச்சி. இரண்டாவது பிரெஞ்சு உயரியல் நிபுணர் கில்லஸ்-எரிக் செரலினி (Gilles-Eric Seralini) மோசண்டோ மக்கசோளத்தை (maize) எலிகளுக்கு தந்து செய்த ஆய்வு. இந்த இரண்டில், இரண்டாவது ஆய்வு மிக பிரபலம். ஆய்வு முடிவை அறிவிக்கும் போது செய்தியாளர் சந்திப்பில் மிக பெரும் புற்றுநோய் கட்டிகள் கொண்ட எலிகளின் படத்தோடு வெளியிடப்பட்ட ஆய்வு. இந்த இரண்டு ஆய்வுகளும் அறிவியல் முறை, சோதனை வடிவமைப்பு, சோதனை மேற்கொள்ளப்பட்ட விலங்கினங்கள் போன்ற பல விசயங்களில் தவறுகள் இருப்பது கண்டுபிக்க பட்டு அவற்றை தவறான ஆய்வுகள் என்று பல வேறு ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டு விட்டது. (இதை பற்றி மேலும் படிக்க, பதிவின் முடிவில் தரப்பட்டுள்ள இணைப்புகளை பார்க்கவும்.)

இது போன்ற முடிவுகள் பெரும்பாலும் மரபணு மாற்று பயிர்களுக்கு எதிராக நிலைப்பாடுள்ள பத்திரிகை, தளங்களில் இருக்கும். இதன் நதிமூலம், ரிஷிமூலம் தேடினால் அவை வாழ்கை ஒரு வட்டம் என பஞ்ச் டயலாக் பேசும் விதமாக ஆரம்பித்த இடத்தில வந்து நிற்கும். இல்லாவிட்டால் எல்லாம் ஒரே ஆய்வில் இருந்து வந்திருக்கும். இங்கு தான் அறிவியல் முறை, அதன் புரிதல் மிக முக்கியமாக தேவை. ஆய்வுகள் ஏற்றுகொள்ளபட வேண்டும் என்றால் அதற்க்கு மிக முக்கிய தேவை அதை எத்தனை முறை யார், எங்கே சரியான நிலைமைகளில் சோதித்தாலும் ஒரே முடிவு தான் அளிக்க வேண்டும். இது நடந்தால் தான் அறிவியல் கருத்தொற்றுமை (scientific consensus) இருப்பதாக, அறிவியல் நிலைபாடாக ஏற்றுக்கொள்ளபடும். அறிவியல் கருத்தொற்றுமை அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது. அறிவியல் வட்டாரத்தில் மிக பிரபலமான ஒரு வரி உண்டு. நீ பெயர் பெற சுலபமான வழி, உன் சகாவின் ஆய்வை தவறென்று நிரூபிப்பது. இன்றைய உலகில் அறிவியல் ஆய்வாளர்களுக்கும், சாமான்ய மக்களுக்கும் அறிவியல் விசயங்களில் மிக பெரிய பிளவுகள் உள்ளது. இதற்க்கு மரபணு மாற்று பயிர்களே சிறந்த உதாரணம். அமெரிக்க அறிவியல் முன்னேற்ற கழகத்தின் (American Association for Advancement of Science) விஞ்ஞானிகளிடம் நடந்த வாக்கெடுப்பில் மரபணு மாற்று பயிர்கள் உண்பதற்கு பாதுகாப்பானவையா, என்ற கேள்வியை வைத்தபோது 88% விஞ்ஞானிகள் ஆம் என பதில் அளித்தனர். இதே கேள்விக்கு மக்களில் ஆம் என பதில் அளித்தது  37% மட்டுமே(இணைப்பு கீழே). உலகின் பல அரசாங்க ஆராய்ச்சி அமைப்புகள், சுயாதீன (Independent) அமைப்புகள் மரபணு மாற்று பயிர்கள் நமக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை என பல நூறு ஆய்வுகளுக்கு பிறகு அறுதியிட்டு கூறிவிட்டன (பார்க்க படம்).

GMAuthoritiesnew1

விஞ்ஞான முடிவு ஒன்றாக இருக்கும் போது, மக்கள் எண்ணம் வேறாக இருக்க காரணம் என்ன? இதற்க்கு முக்கிய காரணம் நாம் மேலே பேசிய உறுதிபடுத்தும் கோடல் தான். மக்களுக்கு படிக்கும் செய்தி எவ்வளவு தூரம் உண்மை என அலசி ஆராயும் பொறுமை இல்லை. அறிவியல் ஆய்வுகளை பற்றி படிப்பது கொஞ்சம் போர் அடிக்கும் விஷயம் தான். எனவே தான் பயத்தை கிளப்பும் செய்திகளும், பரபரப்பு தலைப்புகளும் மக்களை அதிகம் கவர்கின்றன. ஏன் அறிவியல் நிலைப்பாடு இவ்வளவு மதிக்கபடுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. அறிவியல் நிலைப்பாடு ஏற்பட பல ஆய்வு முடிவுகள் தேவை. இந்த ஆய்வு அனைத்தும் நம் உறுதிபடுத்தும் கோடல் போன்று அல்லாமல், கடுமையான விதிகளுக்கு உட்பட்டு, பல தேசத்து விஞ்ஞானிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்பு எற்றுகொள்ளபடுபவை. இந்த கடுமையான விதிமுறை, வழிகாட்டுதல்கள் எல்லாம் அனுசரிக்கபடுவதால் தான் அறிவியல் முடிவுக்கு, அறிவியலாளர் முடிவுக்கு, உங்கள், என் முடிவை காட்டிலும் மதிப்பு அதிகம்.

இப்போது நாம் செய்திகளை அணுகும் விதத்தில் என்ன அடிப்படை பிரச்சனை என்பது தெளிவாகி இருக்கும். இதை எப்படி சரி செய்வது? ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அடுத்த முறை யாரவது ஏதாவது விசயத்துக்கு, இது ஆய்வின் முடிவு என்றால், அவரிடம் எங்கே, எப்போது, யார், ஏன், என்ன, எப்படி என்ற ஆறு கேள்விகளை கேளுங்கள் போதும்.

 1. எங்கே செய்யப்பட்ட ஆய்வு? வேறு எங்கெல்லாம் இந்த ஆய்வின் முடிவுகள் சரிபார்க்கப்பட்டது? எங்கே இந்த முடிவுகள் வெளியிடப்பட்டன?
 2. எப்போது இந்த ஆய்வு நடந்து? இதே போன்ற ஆய்வுகள், இதே அல்லது இதற்க்கு சமமான/எதிரான கருதுகோள் (hypothesis) சரிபார்க்கும் ஆய்வு எங்கே,எப்போது நடந்தது? அதன் முடிவுகள் என்ன?
 3. யார் இந்த ஆய்வை செய்தது? அவரின் நிலைப்பாடு இந்த விசயத்தில் என்ன?
 4. ஏன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது? எந்த கருதுகோள் (hypothesis)சரிபார்ப்பது இந்த ஆய்வின் நோக்கம்?
 5. எப்படி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது? ஆய்வில் இருக்கும் மாறிகள் தவிர மாற்றவை கருத்தில் கொள்ளப்பட்டதா?
 6. என்ன மாறிகள் (variables) அல்லது விளைவுகள் (effects) பற்றி அறிவது இந்த ஆய்வின் நோக்கம்? என்ன முறையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது? ஆய்வுக்கு முந்தைய, ஆய்வுக்கு பிந்தைய நிலைகள் மற்றும் தரவு (data) என்ன? ஆய்வின் முடிவு எந்த பகுப்பாய்வு முறையை (Statistical analysis) கொண்டு முடிவு செய்யப்பட்டது? இந்த ஆய்வின் முடிவு என்ன?

முடிந்தால், நேரம் இருந்தால் அந்த ஆய்வை படியுங்கள். நேரம் இல்லாவிட்டால் ஒரு நடுநிலமையான தளத்தில் அந்த ஆய்வை பற்றி எழுதி இருப்பதை படியுங்கள். விஞ்ஞானிகள் அதை பற்றி என்ன கூறுகின்றனர் என பாருங்கள். அறிவியல் தளங்கள் பல இணையத்தில் கொட்டி கிடக்கின்றன. இல்லை, கொஞ்சம் எளிதாக,தமிழில் வேண்டுமா? அதற்க்கும் தளங்கள் உள்ளன. இந்த தளத்தில் கேள்வி மூலையில் உங்களுக்கு இருக்கும் கேள்விகளை கேட்கலாம். நடுநிலைமையோடு, சான்றுடன் என்னால் இயன்ற வரை பதில் அளிப்பேன். ஊர் கூடி தேர் இழுக்கும் காரியம் இது. வாருங்கள், தேர் இழுப்போம்.

இணைப்புகள்:

 1. உறுதிபடுத்தும் கோடல் (confirmation bias)
  http://psychology.about.com/od/cognitivepsychology/fl/What-Is-a-Confirmation-Bias.htm
  https://en.wikipedia.org/wiki/Confirmation_bias
 2. அறிவியல் முறையின் படிகள்
  http://www.sciencebuddies.org/science-fair-projects/project_scientific_method.shtml#overviewofthescientificmethod
 3. புஸ்தை ஆய்வு பற்றிய விக்கி பதிவு:
  https://en.wikipedia.org/wiki/Pusztai_affair
 4. செரலினி ஆய்வின் விக்கி பதிவு:
  https://en.wikipedia.org/wiki/S%C3%A9ralini_affair
 5. அறிவியல் மற்றும் சமூகத்தின் மீது மக்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பார்வைகள் – Pew ஆய்வு மையம், அமெரிக்கா
  http://www.pewinternet.org/files/2015/01/PI_ScienceandSociety_Report_012915.pdf
 6. மரபணு மாற்று பயிர்களை விலங்குகளுக்கு கொடுத்து செய்யப்பட்ட ஆய்வுகளின் சேகரிப்பு:
  http://www.fass.org/page.asp?pageID=52&autotry=true&ULnotkn=true
 7. மரபணு மாற்று தீவனம்: உண்மையும், புனைகதைகளும் – அலிசன் வான் ஈநேன்னாம், கலிபோர்னியா பல்கழைக்கழகம், டேவிஸ் (GMO Feeds: Fact and Fiction. What does the science say? by Alison Van Eenennaam – UC Davis). 29 வருட கால்நடை தரவுகளை கொண்டு செய்யப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகள்.
  http://animalscience.ucdavis.edu/animalbiotech/my_laboratory/Presentations/2014/WinterHealthMeetings.pdf
 8. மேற்கூறப்பட்ட ஆய்வின் அடிப்பையில் போர்பஸ் (Forbes) பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை:
  http://www.forbes.com/sites/jonentine/2014/09/17/the-debate-about-gmo-safety-is-over-thanks-to-a-new-trillion-meal-study/
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s